Wednesday, March 25, 2009

தமிழர்கள் யாருக்கு ஓட்டு போட வேண்டும்?

இந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈழ தமிழர்களை பாதுகாக்க நினைபோர் யாருக்கு ஓட்டு போட வேண்டும்?

ஓராண்டுக்கும் மேலாக நமது தொப்புள்கொடி உறவுகள், ஆண்கள், பெண்கள், கர்ப்பிணிகள், பிஞ்சுக் குழந்தைகள் என பாகுபாடின்றி தினம் 50 - 100 என இலக்கு வைத்து கொல்லப்பட்டு இன்று வரை சுமார் 3000 பேருக்கு மேல் கொடூரமாக கொல்லப்பட்டு வருகின்றனர், இது தொடர்து கொண்டே இருப்பதை கண்டு நம்மில் பலரது மன நிலை ஆரோகியம் குன்றி வருவது உண்மையே!

நம் கண்களுக்கு முன் இத்தகைய கொடுமைகள் நடந்தும், அதை நாம் வரியாக கட்டிய பணத்தை கொண்டே செய்து முடிக்கும் வன்கொடுமையை உணர்ந்தும், ஏதும் செய்ய முடிய வில்லையே என தினம் செய்திகளில் முகம் புதைத்து கண்ணீர் விடும் என்னை போன்ற பல பல தமிழ் நெஞ்சங்கள் தங்கள் நெஞ்சுக்கு நீதி இன்றி தவிக்கின்ற சூழலில் வருகிறது தேர்தல்!!

ஈழ தமிழர் பிரச்சனையில் 'காங்கிரஸ்' தி.மு.க வின் கரங்களை கட்டிபோடுகிறது அல்லது தி.மு.க காங்கிரசை திருப்த்திபடுத்துவதன் மூலம் ஆட்சியை தக்கவைக்கலாம் என்று எண்ணுகிறது. எப்படி வேண்டுமானாலும் வைத்துகொள்ளுங்கள். ஆனால் தி.மு.க மீண்டும் காங்கிரஸ் கூட்டணியில் இணைந்துவிட்டது, இதை துரதிஷ்ட வசமானது அல்லது சுயநலவாதத்தின் உச்சகட்டம் எப்படி வேண்டுமானாலும் சொல்லுங்கள். இரண்டில் ஏதோ ஒன்று உண்மை.

ம.தி.மு.க ஈழ தமிழர்கள் விசயத்தில் நீண்ட காலமாக (கட்சி தொடங்கிய காலம் முதல்) ஒரு வலுவான நிலைப்பாட்டை, அவர்களுக்கு தனி நாடே தீர்வு என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ள கட்சி. தனது கட்சியின் அங்கத்தினர் பதவி இன்றி இருந்தால் அவர்களை மாற்று(தாய்) கட்சிக்கு எளிதில் இழுத்து விடுவார்கள் என்பதால் மாற்று கருத்துடைய அ.தி.மு.க வுடன் கூட்டணி வைத்துக்கொண்டாலும், தனது நிலைப்பாட்டிலிருந்து வளைந்து கொடுக்காத கட்சி அல்லது தலைவர்.

பா.ம.க, மாநிலத்தில் - காங்கிரஸ் கட்சியின் ஆதரவில்தான் இனப்படுகொலை நடக்கிறது என்று உண்மையாய் உண்மையை மேடைக்கு மேடை முழங்கினாலும், அதே காங்கிரஸ் கட்சி தந்த மந்திரிப் பதவியை உதர முடியாமல் இருதலை கொல்லி எறும்பு போல உள்ளது அல்லது பதவி ஆசை காரணமாக ஒட்டிக்கொண்டு இருக்கிறது.

விடுதலை சிறுத்தைகள், இவர்களுக்கும் ம.தி.மு.க வுக்கும் ஈழ விசயத்தில் முரண்பாடு இல்லை, ம.தி.மு.க என்ன காரணத்துக்காக அ.தி.மு.க கூட்டணியில் இருக்கிறதோ அதே காரணம்தான் இவர்கள் தி.மு.க கூட்டணியில் இருக்கவும்.

கம்யூனிஸ்டுகள், அப்பாவி தமிழ் மக்கள் சிங்கள அரசால் கொல்லப்படுவதையும் அதற்க்கு 'காங்கிரஸ்' துணை நிற்ப்பதையும் மாநிலத்தில் கண்டிக்கிறது.

தே.மு.தி.க வும், ஈழ மக்களின் மீது கரிசனம் கொண்டு இருப்பதை, மக்களை சந்திக்கும்போது எல்லாம் எடுத்து கூறுகிறது. அதுவும் மதில் மேல் பூனை போல் உள்ளதால் இப்போதைக்கு ஒன்றும் சொல்ல முடியாது.

தமிழகத்தை பொறுத்த வரை இதில் (ஐயா / அம்மா) ஏதோ ஒரு கூட்டணியில் இருந்தால்தான் கட்சியை நடத்த முடியும் என்ற நிலை ஒருபுறம் இருக்கிறது. இதை நாம் மறந்து விட முடியாது. ஏனென்றால், பல வருட காலமாக மாறி மாறி ஆட்சியில் அமரும் அய்யாவும், அம்மாவும், காவல்த்துறை, சட்டத்துறை என முக்கிய இடங்களில் தனி செல்வாக்குடன் இருகிறார்கள், இன்று யாரவது நான் மக்களுக்கு நல்லது செய்கிறேன் எனக்கு ஒட்டு போடுங்கள் என்று கிளம்பினால் என்ன நடக்கும் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும் என்று நம்புகிறேன். (தெரியாதவர்கள் பின்நூட்டமிடவும் நான் சொல்கிறேன்!)

'காங்கிரஸ்' - இவர்களுக்கு ஈழம் என்றால் நினைவுக்கு வருவது ராஜீவ் கொலை மட்டுமே. அதை தாண்டி எதையும் யோசிக்க தயாராகாதவர்கள், தினம் தினம் தன் இன மக்கள், அப்பாவி மக்கள், தங்கள் கட்சி தலைமையின் தவறான பார்வையினால் கொல்லப்படுகின்றனர் என்பதை உணர மறுப்பவர்கள்.

இந்த பேரவலத்தை தடுத்து நிருத்தச் சொல்லி மத்தியில் உள்ள தங்கள் கட்சி தலைமையினை மன்றாடி கேட்கும் தார்மீக பொறுப்பில் தாங்கள் இருப்பதை முற்றாக மறந்து விட்டு, தங்கள் தலைவியின் கண்கள் மறைக்கப்பட்டு இருந்தால், உண்மையை அவர்(சோனியா) விளங்க உதவுவதை விட்டுவிட்டு, பிச்சைக்கார பதவிக்காக தங்கள் தாயின்(தமிழ்) இரத்தத்தையும் விற்க துணிந்தவர்கள்.

இந்திய மக்கள் சுதந்திரம் வாங்கித்தந்த கட்சி என்ற அடிப்படையில் போடும் ஓட்டுக்களை பொருக்கி அதில் சுகம் கண்டு பழகிய மூடர்கள். பதவியை தக்க வைக்க சொந்த இன மக்களையே புறம்தள்ளி டில்லியில் உள்ள பெரும் தலைகளின் கால்களை பூஜிக்க போட்டி போடுபவர்கள். தங்கள் கட்சியின் உண்மைத்தொண்டன் தீகுளிப்பதை பற்றி சிறிதும் கவலை இன்றி, தலைவிக்கு ஒத்து ஊத சண்டை போட்டுக்கொள்ளும் முட்டாள்கள்.

ஆக, ஈழ தமிழ் மக்களின் துயரம் கண்டு, தங்கள் தொப்புள்கொடி உறவுகளாய் இருந்தும் எந்த ஒரு உதவியும் செய்ய முடியவில்லையே என்று ஏங்கும் ஒவ்வொரு தமிழனும் - "யாருக்கு ஓட்டு போடுவது"?

நம் கையில் இருக்கும் ஒரே ஒரு ஆயுதம் 'வாக்குரிமை' மட்டும் தான். ஆம், பிற ஜனநாயக உரிமைகள், குறிப்பாக 'பேச்சுரிமை' நமக்கு இருக்கிறதா? முற்காலத்தில் இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்தது, இப்போதும் செய்கிறது இதை சொன்னால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்கிறது.

நடக்கும் உண்மையை பேசியதர்க்கே இப்போது மூன்று பேரை சிறையில் அடைத்திருக்கிறது நம் அரசு! இவர்களுக்கு ஓட்டு போட்டு அதிகாரம் அளித்த நமக்கு, "என் பணத்தை கொண்டு நான் கொடுத்த அதிகாரத்தை கொண்டு என் வாசல் வழியே ஆயுதம் தந்து, என் சகோதர சகோதரிகளையே கொள்கிறாயே, இது நியாயமா?" என்று கேட்டால், தேச துரோகமா சிறை தண்டனையா?!

சரி எப்படியோ 5 வருடம் முடிந்து மீண்டும் நமக்கு கிடைத்துள்ள வாக்குரிமையை அவர்கள் நம்மிடம் கேட்டு வரப் போகிறார்கள். இப்போது உள்ள கூட்டணி சூழ்நிலையில்...

  • அனைவரும் ஓட்டு போட வேண்டும்.
  • உண்மையான தமிழன் என்று தன்னை நினைக்கும் ஒவ்வொருவரும் எக்காரணம் கொண்டும் காங்கிரஸ் கட்சிக்கு 'ஓட்டு' போடவே கூடாது.
  • தாங்கள் மனிதாபிமானி, மிதவாதி, வன்முறைக்கு எதிரானவர்கள் என்றுஅடையாளப் படுத்திகொள்ளும் ஒவ்வொரு இந்தியனும், 'மனிதாபிமானமேஇன்றி அப்பாவி மக்களை தினம் கொள்ளும் இலங்கை இனவாத அரசுக்கு' ஆதரவளிக்கும் காங்கிரஸ் கட்சியை புறக்கணிக்க வேண்டும்.
  • அயல் நாட்டு மண்ணில் தன் இன விடுதலைக்காக போராடும் ஒரு விடுதலைஅமைப்பை நசுக்க முன்னுரிமை கொடுத்து, தன் சொந்த நாட்டின் பாதுகாப்புக்கு ஊறு விளைவித்த (மும்பை தாக்குதல்) பொறுப்பற்ற காங்கிரஸ் அரசைஒவ்வொரு இந்தியனும் தோற்கடிக்க வேண்டும்.
  • காங்கிரசை தவிர்த்து நீங்கள் எந்தக் கட்சிக்கு வேண்டுமானாலும் ஓட்டுபோடலாம், போட்டியிடும் அனைத்து தொகுதியிலும் காங்கிரஸ் மண்ணைக்கவ்வ வேண்டும். ஈழ மண்ணில் இறந்த ஒவ்வொரு குழந்தை உயிருக்கும் இவர்கள் பதில் சொல்லியே தீர வேண்டும்.
  • இனப் படுகொலை செய்ய துணையிருந்த காங்கிரஸ் கட்சி, மீண்டும் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட 'டெபாசிட்' வாங்க முடியாமல் போனது என்று வரலாறு சொல்ல வேண்டும். இது பிற கட்சிகளுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்.
  • அதுமட்டுமல்ல நண்பர்களே! நாம் ஒவ்வொருவரும் நமக்கு தெரிந்தநண்பர்களிடமும், உறவினர்களிடமும், இயன்ற அனைத்துவாக்காளர்களிடமும் காங்கிரஸ் கட்சியை புறக்கணிக்க வற்ப்புருத்தவேண்டும். இது நம் ஒவ்வொருவராலும் செய்ய முடிந்ததே. இது தான் மிக மிகமுக்கியம், வார இறுதி நாட்களில் நம் ஓய்வு நேரத்தில் இதை செய்தால் கூட, ஓரளவுக்கு நமது மனிதாபிமான கடமையை செய்தவர்களாவோம்.

"'அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றம் ஆம்' என்னும்,
பல்
அவையோர் சொல்லும் பழுது அன்றே - பொல்லா
வடுவினையே
செய்த வய வேந்தன் தேவி!
கடு
வினையேன் செய்வதூவும் காண்."

இது சிலப்பதிகாரத்தில், அரசனால் (கவனக்குறைவால்) வஞ்சிக்கப்பட்ட கண்ணகி மொழிவது. இன்று தெரிந்தே பல உயிர்களை கொள்ளும் இந்த அரசு என்ன செய்ய போகிறது?! கண்ணகிக்காக சிலை வைத்தவருக்கு இது புரியாமல் போனது தான் காலக் கொடுமை.

குறிப்பு : இந்த பதிவை யார் வேண்டுமானாலும் மீள் பிரசுரம் செய்து அவர்கள்வலையில் பதிவிட்டுக் கொள்ளலாம்.

   

இந்த பதிவு பலருக்கு சென்றடைய விரும்பினால், தங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள்.

Wednesday, March 18, 2009

இன நலனும் பாதை மாறிய கூட்டணி அரசியலும் - காரணம் யார்?!இன்றைய அரசியல் சூழலில் ஏன் தலைவர்கள் தங்கள் கொள்கைகளையும் இன நலனையும் மீறி கூட்டணி அமைத்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளனர். நேற்று வரை தமிழர்கள் இன அழிப்பு என்று கதறிய தலைவர்கள் அனைவரும் இன்று கூட்டணி குதிரையில் எந்த குதிரையில் ஏறலாம், எது வெற்றிபெறும், என்று அந்தந்த குதிரைகளின் ஒட்டு மொத்த கொள்கை பற்றி கவலையின்றி - எதோ ஒரு கூட்டணியில் தொற்றிக்கொள்ள வேண்டும் என்று எத்தனிப்பது ஏன்? இது இன்று நம் மனதிலும் எழும் அதிர்ச்சியான கேள்வி?!.

ஆனால் எதார்த்தத்தை நாம் உணர வேண்டும். இன்றைய அரசியல் சூழலில், ஒரு தலைவன் எந்த கட்சியானாலும் சரி, எந்த உண்ணதமான கொள்கை கொண்டிருந்தாலும் சரி அரசியல் வெற்றி பெற முடியாது! நல்லது செய்யவேண்டும் என்று எண்ணி பயனில்லை! எனென்றால், ஒரு அரசியல் கட்சி தலைவர், முதலில் தன்னுடன் இருக்கும் மக்கள் செல்வாக்குடைய புள்ளிகளை திருப்ப்திபடுதியே ஆகவேண்டும். குறிப்பாக பெரும் கட்சிகளின் ஆதரவுடன் காலம் தள்ளும் சிறு கட்சிகள் ம.தி.மு.க, பா.ம.க, இடதுசாரி, வலதுசாரி, விடுதலை சிறுத்தை, என்பன...

யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்பது முதல், என்ன பேசலாம் என்பது வரை ஆலோசனைகள் கேட்டே தீர வேண்டும். இந்த பெரும் புள்ளிகளுக்கு நீங்கள் சொல்வதுபோல் மாற்றமின்றி ஒரு ஒற்றுமை இருக்கிறது அது பணம் கொழிப்பது, பதவி சுகம் காண்பது, இன்னும் பிற லட்சியங்கள்...

தலைவர்கள் தேர்தல் இல்லாத காலங்களில் சற்று சுதந்திரமாக செயல் பட முடியும், பேசமுடியும், இழவுக்கு போய் அழ முடியும். ஆனால், தேர்தல் என்று வந்தால் ஓயாமல் தங்கள் உடனிருப்பவர்களை திருப்தி படுத்தும் வேளையிலேயே ஈடுபட முடியும்!
இந்த செல்வாக்குள்ள புள்ளிகளுக்கு கட்சி கொள்கை எல்லாம் சும்மா தோளில் போடும் துண்டு போல சுலபமாக மாற்றிக்கொள்ளலாம், "தலைவர் என்னை அவமதித்தார் அதனால் நான் கட்சி தாவுகிறேன்". அவ்வளவுதான். சமீபத்திய உதாரணம் 'கண்ணப்பன்'.


நான் தலைவர்களுக்கு வக்காலத்து வாங்குவதாக நினைக்க வேண்டாம். அவர்களுக்கும் கட்சிதான் முக்கியம். அரசியல் வெற்றி இன்றி பொருளாதார நலன்(!) இன்றி கட்சியை நடத்த முடியாது. கட்சியை காப்பாற்ற ஒரு சில இடங்களையாவது தக்கவைக்க வேண்டும், அதற்க்கு இந்த புள்ளிகள் வேண்டும், பெரும் கட்சி தலைவர்கள் (ஐயா / அம்மா) ஆசி வேண்டும். ஏனென்றால், நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக சாதி அடிப்படையில் மத அடிப்படையில் நாம் (தமிழர்கள்) பிரித்து ஆளப்பட்டு வருபவர்கள். நம் மக்களுக்கு மரபு வழியாக இரத்தத்தில் ஊரியது - சாதி மத உணர்வு. இன்று அதை வைத்தே தேர்தல் கணக்குகள் போடப்படுகின்றன. பெருந்தலைகள் - குறிவைப்பது, தக்கவைப்பது, திருப்ப்திபடுதுவது எல்லாம், சாதி ஆதரவுள்ள தலைவர்களை தான்.

நாம் பொதுவாக நினைத்துக்கொள்வது திருமா, ராமதாஸ் போல சிலர்தான் சாதி அடிப்படையில் இயங்கி வெற்றிபெறும் கட்சிகள் என்று, ஆனால் அது உண்மையல்ல. எந்த கட்சியாக இருப்பினும், போட்டியிடும் ஒவ்வொரு தொகுதியிலும், அந்தந்த தொகுதியில் எந்த சாதியினர் அதிகமாக வசிக்கின்றனரோ, அவர்கள் ஆதரவை பெறுகின்ற ஆள் யார் என்று பார்த்து சீட்டு கொடுப்பது தான் விதி("பார்முலா"). (இந்த விதியில் இருந்து சற்று மாறுவது பொது உடமை கட்சி. ஆனால் அதிலும் ஒரு வேடிக்கையான உண்மை ஒன்று, எனக்கு தெரிந்து பொது வாழ்வில் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டு சுயநலமின்றியும் பொருள்சேர்க்கும் ஆசையின்றியும் இருக்கும் 'நல்ல கண்ணு ' அவர்கள் கடந்த முறை என் கொங்கு நாட்டில் போட்டி இட்டார், ஆனால் அவருக்கு - வெற்றிபெற்றவர் பெற்ற ஓட்டு எண்ணிக்கையில் பாதி கூட விழவில்லை. ஏன்??!)


சற்று முந்தைய காலத்தில் நல்ல தலைவர்கள் நம்மை ஆளும் வாய்ப்பு இருந்தது, உதாரணமாக பெருந்தலைவர் காமராஜர், அறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் போன்றோர். அப்போது சுதந்திரம் பெற்றுக்கொடுத்த கட்சி காங்கிரஸ் என்று காமராஜர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்பு உண்மையான தமிழுணர்வாளர், மொழி சுதந்திரத்திற்காக போராடி வெற்றி பெற்றார், ஆட்சியமைத்தார் அறிஞர் அண்ணா. பின்பு சக்தி வாய்ந்த ஊடகமாக விஸ்வரூபம் எடுத்த திரைப்படத்துறை மூலமாக நல்ல கருத்துக்களை பதித்து பெரும்பாலான ஏழைகளின் மனதில் இடம் பிடித்து ஆட்சியை பிடித்தார் புரட்சித்தலைவர். அனால் இவர்கள் எல்லாம் நல்லவர்களாக, மக்களுக்கு தொண்டு செய்யும் மனம் படைத்தவர்களாக இருந்து விட்டனர். நம் புண்ணியம்.

ஆனால் இன்றும், முன்பு சொன்ன வழிகளை கடைப்பிடித்து ஆட்சிக்கட்டிலில் அமர திட்டம் போடும் தலைவர்கள் தான் நம்மிடம் உள்ளனர். அது ஐயாவாக இருந்தாலும் சரி அம்மாவாக இருந்தாலும் சரி அண்ணனாக இருந்தாலும் சரி. நமது மக்களும், கொடுப்பதை வாங்கிக்கொண்டு பின் விளைவுகளை பற்றி கவலையின்றி குத்துகின்றனர்... இந்த ஓட்டு கணக்கு அரசியல் வாதிகளுக்கு கைவந்த கலை. இதுவரை அம்மாவும் ஐயாவும் மாறி மாறி தங்கள் கொல்லைபுரங்களை கரன்சியால் நிரப்பி விட்டனர். சரி விஜய காந்த் புதுசா எதோ சொல்கிறாரே என்று சற்று திரும்பினால் பொதுகூட்டம் போட்டு தன் பலத்தை காட்டி, இப்போது நல்ல விலை எதிர்பார்த்து காத்திருக்கிறார் போலும்?!

இந்த சூழ்நிலையில் நாம் செய்ய முடிந்தது, அந்தந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் கட்சி கரிசனம் இன்றி, சாதி சார்பு இன்றி, குறைந்த கெட்டவர்களையோ, அதிக நல்லவர்களையோ, நல்ல கொள்ளயர்களையோ, தேர்ந்தெடுப்பதுதான். குறைந்தது அரசியல் வாதிகளின் சாதி கணக்கையாவது பொய்க்க வைப்போம். கொஞ்சமாக அரசியல் சாக்கடையில் கெட்டுப்போனவர்களை, மேலும் கெடாமல் தடுப்போம். சாதியை தாண்டி, கொள்கை பிடிப்புடன் இருக்க முயலும், மக்களுக்கு பொதுவாக நல்லது செய்ய நினைக்கும் நபர்களை, மக்கள் உணர்வை புரிந்து அவர்களை நல்ல முறையில் வழி நடத்தும் (குறைந்தது முயற்சிக்கும்) நபர்களை தேர்ந்தெடுத்து, ஒரு மாபெரும் பின்னடைவில் இருந்து மீளும் முதல் அடியை எடுத்து வைப்போம்.

வரும்காலங்களில் நமது பிள்ளைகளுக்கு, நல்ல குணங்களை வளர்த்து, தீயவர்களை அடையாளம் கண்டு ஒதுக்கும் திறனை கற்றுக்கொடுத்து, வருங்கால தமிழ்களை மொழி பற்றுடயவர்களாகவும், நாட்டுப்பற்று உடையவர்களாகவும் வளர்த்து நல்ல எதிகாலத்தை அமைக்க வேண்டும். குறிப்பாக இன்று எல்லா வீட்டிலும் சுயநலம் கற்றுக்கொடுப்பவர்களாகவே பெற்றோர் இருகிறார்கள். அந்த சுய நல வட்டத்தை எப்போது உடைத்து எறிகிறோமோ அப்போதுதான் நல்ல தலைவர்கள் உருவாவார்கள்.

இந்த கட்டுரையை படித்துவிட்டு தங்கள் கருத்தை சொன்னால் நன்றாக இருக்கும்.

நன்றி.

   

இந்த பதிவு பலருக்கு சென்றடைய விரும்பினால், தங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள்.

Friday, March 13, 2009

கல்விக்கண் திறக்க மாற்றம் தேவை!
கல்வி மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதது... கல்வியின் முக்கியத்துவத்தை சங்க காலம் தொட்டே வழியுருத்திக் கொண்டு வந்துள்ளனர் நமது முன்னோர். "எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்" என்றாள் 'கொன்றை வேந்தனில்' ஔவை, "எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு" என்றார் வள்ளுவர்.

இவ்வாறாக கல்வியின் நன்மை அறிந்து, 'தான் கல்வியறிவு இல்லாதவர்களாக இருப்பினும், தம் குழந்தைகள் அவ்வாறு இல்லாமல் நன்றாக பயின்று நல்ல நிலைமைகளுக்கு வர வேண்டும்' என்று எண்ணிய, உயர்ந்த உள்ளங்கள் நம் முன்னோர்கள் தொடங்கி, நமது பெற்றோர் உள்பட முன்வந்ததால், தற்போது கல்வி அறிவு அற்ற மக்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து கொண்டு வருகிறது. ஒருபுறம் கல்வி பெற முடியாத குழந்தை தொழிலார்களை கண்டு மனம் வேதனைப்பட்டாலும், மறுபுறம், கற்றவர் விழுக்காடு பெருகி வருவதை காணும்போது, கூடிய விரைவில் கல்வி அறிவு இல்லாதோர் இல்லை என்ற நிலை உருவாகும் என்ற நம்பிக்கையை தருகிறது..

தமிழக பள்ளிகளின் நிலைமை:
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை (admission) நடை பெரும் காலம், உறவினர் வீட்டிற்க்கு சென்றிருந்தேன். அவர்கள் குழந்தையை பள்ளியில் (L.K.G யில்!) சேர்க்க எப்படி அல்லல் படுகிறார்கள் என்பதை சொன்னபோது ஆடிப் போய் விட்டேன். சென்னையில் நிலவரம், குறைந்தது 10 ஆயிரம் தொடங்கி 25 ஆயிரம். இங்கு குறிப்பிட்டது நடுத்தர மக்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளின் நிலவரம் மட்டுமே!


அரசு பள்ளிகளில் சேர்த்தால் தரமான கல்வி கிடைப்பது இல்லை என்பது இந்த மாதரி உள்ள பெற்றோர்களின் புலம்பல். இது உண்மையாகவே உள்ளது. அரசு ஆரம்பப் பள்ளிகள் நாடு நிலைப் பள்ளிகள், உயர்நிலை பள்ளிகள் வரை, அரசு கல்வி நிறுவனங்களுக்கும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ள தர இடைவெளி மிகவும் அதிகமாக காணப்படுவதை இயல்பாக உணரலாம். ஏன்?!

தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் தொகை அதிகமாக இருக்கிறது, அதனால் அதிகம் படித்த ஆசிரியர்களை அதிக ஊதியம் கொடுத்து வேலைக்கு அமர்த்தலாம். உண்மைதான், ஆனால் சொத்து வரியாக ஒவ்வொரு நகராட்சியிலும் வசூலிக்கப்படும் 2% கல்வி வரி (education cess) என்ன செய்து கொண்டு இருக்கிறது?? உதாரணமாக தூத்துக்குடி நகராட்சியில் வசூலிக்கப்பட்ட கல்வி வரி 3 கோடி அனால் ஆரம்பப் பள்ளிகளுக்காக செலவழிக்கப்பட்ட தொகை வெறும் 5 லட்சம் மட்டுமே! இதுபோல நம் நாடு முழுதும் கல்விக்கான பணம் தேங்கிக்கிடக்கிறது. இது இவ்வாறு இருக்க, தமிழகத்தில் பல நகரங்களில் அரசு ஆரம்பப் பள்ளிகள் மூடும் நிலையில் உள்ளன... இந்தியா முழுவது எடுத்துக்கொண்டால், 6 - 14 அகவை உள்ள குழந்தைகளில் பாதிக்கும் குறைவான எண்ணிகையினரே பள்ளிக்கு செல்கின்றனர் என்கிறது 'CRY' என்ற குழந்தைகளுக்கான தொண்டு நிறுவனம்.

கல்வி தரத்தை உயர்த்த என்ன செய்யலாம்:

இதே போல அரசு, ஆசிரியர்கள் தேர்வில் - திறமைக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்பது அரசு பள்ளியில் பயின்ற அனைத்து மாணவர்களுக்கும் தெரியும். நான் படித்த அரசு மேல்நிலைப் பள்ளியில் எனக்கு பாடம் எடுத்த 20 ஆசிரியர்களில் 10 பேர் உதவாக்கரைகள், (இப்போதாவது அந்த நிலைமை சற்று மாறி இருக்கும் என்று நம்புகின்றேன்!) இது கசப்பான உண்மை, சிறந்த ஆசிரியர்களும் ஒன்று இரண்டு பேர் இருந்தனர்.. அரசு ஆசிரியர்களை நியமிக்கும் பொழுது சாதி அடிப்படிலான இட ஒதுக்கீட்டுக்கு தரும் முக்கியத்துவத்தை ஆசிரியர்களின் திறமைக்கும் தர வேண்டும் என்பது என் கருத்து.

மேலும், அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு அரசு 'கல்வி வரி' மூலம் சேர்த்த பெரும் தொகை கொண்டு நல்ல பயிற்சிகளுக்கு ஏற்ப்பாடு செய்யலாம். தனியார் பள்ளிகள் பெரும் நகரங்களிலேயே முகாமிட்டு வளம் கொளிக்கின்றனர். அவர்கள் கிராமப் புறங்களை கண்டு கொள்வதே இல்லை, அதனால் கிராமங்களில் உள்ள ஆசிரியர்களுக்கும் நகராங்களிலும், பெரு நகராங்களிலும் உள்ள ஆசிரியர்களுக்கும் திறன் வளர்க்கும் பயிற்சி வகுப்புகள், உளவியல் பயிற்சிகள் கொடுப்பது மூலமும் நாடு முழுவதும் ஒரே சீரான நல்ல தரமுள்ள கல்வியை தர முடியும் அல்லவா??

குழந்தைகள் மனதை ஆக்கிரமிப்பதா??

குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பே, பெற்றோர்கள் இப்போதெல்லாம் ஆரம்ப பாடங்களை சொல்லித்தருகிறார்கள். நல்ல விசயம் தான். ஆனால், நான் பார்த்த வரையில் "கை வீசம்மா கை வீசு" காணமல் போயிருந்தது, அந்த இடத்தை "Ringa Ringa roses" ஆக்கிரமித்து கொண்டுவிட்டது... நான் ஆங்கில பாடல்களுக்கோ, கவிதைகளுக்கோ நான் எதிரி அல்ல. ஆனால், தமிழ் புறம் தள்ளப்படுவதை தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை. உதாரணமாக என் உறவினரின் பிள்ளைகளுக்கு "ABCD" கற்றுத்தர பல மாதரியான புத்தகங்களை வைத்துள்ளனர் ஆனால் அந்த பிள்ளைகளுக்கு "அ ஆ இ ஈ " என்றால் என்ன என்றே தெரியாது!!

இது அவர்கள் வீட்டில் மட்டுமல்ல மாகணம் பொருந்தியவர்களே.. இந்த வருடம் சென்னையில் நடந்த புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்தேன், குழந்தைகளுக்கான புத்தகங்கள் நிறையா விற்கப்பட்டுக் கொண்டிருந்தன. மகிழ்ச்சியுடன் உறவினர் குழந்தைகளுக்கு சில புத்தகங்கள் வாங்கலாமே என்று சென்றேன். அனைத்து பெற்றோர்களும் அங்கு தள்ளு முள்ளு நடத்தி பொறுக்கிக் (சேகரித்து என்று வைத்துக் கொள்ளுங்கள்!) கொண்டிருந்தது, அனைத்தும் ஆங்கில புத்தகங்கள். இருந்த ஒன்றிரண்டு தமிழ் புத்தகங்களும், ஆங்கிலம் பயிற்றுவிக்கும் புத்தகங்களை போல ஆர்வம் ஊட்டும் வகையில் ('interactive way') இல்லை! ஆங்கில புத்தகங்கள் எழுத்துக்களை, வார்த்தைகளை விளக்கும் விதத்திலும் படங்களுடனும், பளிச்சென்றும் இருந்தன, ஆனால் தமிழ் கற்கவோ, கருப்பு வெள்ளை மையில் அச்சடித்த நான்கு கோடு புத்தகங்களே இருந்தன...

அதே போல குழந்தைகள் கற்க நீதி கதைகள் உள்ள புத்தகம் வாங்கலாம் என்றாலும் தமிழில் ஒரு புத்தகம் கூட இல்லை. மூன்று, நான்கு கடைகளில் நடத்துனர்களை விசாரிதேன், பதில் 'NO'! இதற்க்கு பெற்றோர் சொல்லும் சமாதானம் "ஆங்கிலம் தான் அயல் மொழி - கற்றுக்கொள்ள சிரமம் தமிழ் வீட்டில் பேசுகிற மொழி தானே சுலபமாக வந்துவிடும்" அவர்கள் தமிழின் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி...
ஆனால் என்னுடைய கேள்வி "கணிதம், அறிவியல், முதலியன எளிதாக கற்றுக்கொள்ளும் குழந்தைகள் அவற்றை போல் ஆங்கிலத்தையும் கற்றுக்கொள்ள மாட்டார்களா?? தமிழை பதவி இறக்கி விட்டு குழந்தைகள் மனதில் ஆங்கிலத்தை அரசாள விடுவதில் என்ன அற்ப மகிழ்ச்சி?!"

அரசியல் வாதிகளின் பொறியியல் அட்டூழியங்கள்:

மக்கள் தொகை கூடிக்கொண்டே செல்லும் நிலையில், கல்விக் கூடங்களும் அதிகரிக்கவே செய்கிறது. ஆனால், இன்று கல்வி, ஆரம்பப் பள்ளி முதல் பொறியியல், மருத்துவம் என்று சகல மட்டங்களிலும் வியாபாரம் ஆக்கப்பட்டதுதான் வேதனையான விசயம். குறிப்பாக, 'பொறியியல் துறை' அரசியல் வாதிகளின் முக்கிய இலக்காக மாறிப் போய் விட்டது... தேவைக்கு அதிகமாக பொறியியல் கல்லுரிகளுக்கு அனுமதி கொடுப்பது மட்டுமின்றி, தாங்களே ஆரம்பித்து பினாமி (மனைவி/கொழுந்தியா என) பெயரில் நடத்துகின்றனர். தங்களின் கட்சி ஆட்சியில் இருக்கும் போது ஆனுமதி அளித்து கல்லூரிகளை துவக்கி, வேறு கட்சி ஆட்சியில் இருக்கும் போதும் சம்பாதிக்க இது ஒரு சிறந்த வழியாக தேர்ந்தெடுத்து உள்ளனர்.

அதிலும் முதலில் ஒரு ஆண்டு மாணவர்கள் மட்டும் படிக்கும் வகையில் கட்டிடங்களை கட்டுவது, தரமான பொறியியல் படிப்புக்கு தேவையான
சாதனங்களில் பாதியை மட்டும் வைத்துக்கொண்டு ஒப்பேற்றுவது, பின் படிக்கும் மாணவர்களின் பெற்றோரின் ரத்தத்தை பிழிந்து தங்கள் இஷ்டத்திற்கு ஆயிரத்தி எட்டு வகையான கட்டணங்களை வசூலித்து தேவைப்படும் வசதிகளை செய்து கொண்டும், தாங்கள் மேலும் சம்பாதிக்க, விளம்பரம் செய்துகொள்ள வழி செய்து கொள்வது... இது தானே நடக்கிறது.. இப்படி அந்த கல்வியின் தரத்தை பற்றி சிறிதும் கவலை இன்றி சகட்டு மேனிக்கு கல்லூரிகளை ஆரம்பித்ததால் இப்போது கட்டணத்தை ஒழுங்கு படுத்தவும் ஆளில்லை. தரத்தை நிர்மாணிக்கவும் வழி இல்லை. இப்போது இது யாரை பாதிக்கும்? கல்லூரி நடத்துவோரையா? இல்லை. மாணவர்களைத்தான். அவர்கள், ஏதோ பட்டம் பெற்றோம் என்ற நிலையில் தான் இருப்பார்கள். சர்வதேச மாணவர்களுடன் போட்டியிடும் நிலையில் இருக்க மாட்டர்கள். இதை பற்றியெல்லாம் கவலைப்பட நம் அரசியல் (வ)வியாதிகளுக்கு எங்கு நேரம் இருக்கிறது??

உடனே, நான் பொறியியல் கல்விகளுக்கு எதிரானவன் என்று சொல்ல வேண்டாம், நானும் ஒரு பொறியாளர்தான். மேலை நாடுகளில் உயர் கல்வி என்று வந்தால் பல துறைகளில் மாணவர்கள் தங்கள் முனைப்பை காட்டுகின்றனர். அனால் இங்கு ப்ளஸ் டூ படித்து முடிக்கும் ஒவ்வொரு மாணவனையும் வசீகரிப்பது பொறியியல் கல்லூரிகளின் விளம்பரம்தான். "விளம்பரம் மட்டும் செய்தால் நம் மக்கள் ஆட்டு மூத்திரத்தை கூட சுத்த இளநீர் என்று ஒரு கை பார்த்து விடுவார்கள் என்று அவர்களுக்கு தெரியும்." சரி வேறு என்ன செய்ய சொல்கிறீர்கள் என்று கேட்கலாம்?!

மாற்று வழி இருக்கிறது, எதிர்காலத்தில் இயற்க்கை சார்ந்த துறைகளில் மாணவர்களை தயார் செய்வதுதான் ஒட்டு மொத்த உலகத்துக்கும், நாட்டுக்கும், ஒவ்வொரு குடும்பத்துக்கும் பயனுள்ளதாக இருக்கும். ஆம், இதை ஆங்கிலத்தில் "green collar jobs"
என்கிறார்கள். இதன் மூலம், நாம் செய்யும் வேலை, நமக்கு வருமானத்தை ஈட்டும் வகையிலும், அதே சமயம், நாம் வாழும் இந்த பூமிக்கு புத்துயிர் அழிக்கும் வகையிலும் இருக்கும். நமது கிராமப் புறங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கும், நகரப் புறங்களில் கணிப்பொறி மற்றும் இயந்திரத் தனமான வாழ்க்கையை அனுபத்த மாணவர்களுக்கும், இது ஒரு அருமையான மற்று வழியாகத்தானே இருக்கும்?!

அதாவது, தொழில் வளர்ச்சியை, அதன் முதலீடுகளின் பெரும் பங்கை, இயற்க்கை சார்ந்த ஆதாரங்களை பெருக்க பயன்படுத்துவது. உதாரணமாக, சூரியவொளி கலங்களை தயாரிப்பது, காற்றாலைகளுக்கு தேவையான தொழில் நுட்பங்க்ளை பெருக்குவது, இதன் மூலம், நன்கு படித்த இளைஞர்களுக்கு இந்த தொழில் நுட்பங்கள் தாயரிக்கும் வேலைகளும், குறைந்த கல்வி பெற்றிருப்பவர்களை கொண்டு இதற்க்கு தேவையான மனித சக்தி பெறுவதும் இதன் சாராம்சமகும். இதன் மூலம் பல கோடி கணக்கில் இந்தியா போன்ற பெரிய நாடுகளில் வேலை வாய்ப்பை பெருக்கலாம். வேலை இல்லாத் திண்டாட்டத்தை ஒழிக்கலாம்.

சற்று சிந்தித்துப் பாருங்கள், நமது ஆட்சியாளர்கள் இது போன்ற சிந்தனையுடன் எப்போதாவது செயல் பட்டு இருக்கிறார்களா?? மாறாக, கல்வியை முற்றிலும் வியாபார மயமாக்கி, மக்களை ஏமாற்றி அவர்கள் சேமித்த பணத்தை பறிக்கும் கள்வர்கள் வேலை அல்லவா பார்க்கிறார்கள்?

மாற்றம் தேவை!! ஆம் எல்லா இடங்களிலும், எல்லாருடைய மனங்களிலும் மாற்றம் தேவை..

   

இந்த பதிவு பலருக்கு சென்றடைய விரும்பினால், தங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள்.

Thursday, March 5, 2009

காந்தியின் தேசமே, விவசாய நிலங்களை காப்பாற்றுங்கள்!இன்று காந்தியின் பொருட்களை ரூ. 9.3 கோடிக்கு ஏலத்தில் எடுத்தார் இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா. இவர் சாராய சாம்ராஜியத்தின் மன்னன் என்று கூறப்பட்டாலும், நமது நாட்டின் பெருமையை விலைபோகாமல் காப்பாற்றியதற்காக இவரை நான் பாராட்டுகிறேன். ஆனால், அந்த பொருட்களை வைத்திருந்த ஜேம்ஸ் ஓடிஸ் எழுப்பிய கோரிக்கைகள் நம்மை சிந்திக்க வைத்துள்ளன.

"ஓடிஸ் இந்திய அரசு பட்ஜெட்டில் ராணுவ செலவுக்கு முன்னுரிமை கொடுப்பதற்கு பதிலாக, ஏழைகளின் சுகாதார வசதிகளுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும்" என்ற ஒரு கோரிக்கையை வைத்திருந்தார்.

இதில் உள்ள உண்மையை நாம் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகள் அனைத்துமே பாதுகாப்பு துறைக்காக தங்களது மொத்த உற்ப்பத்தியில் பெரும் பகுதியை செலவிடுகின்றன. இருப்பினும்
காந்தி
- அகிம்சை போதித்த இந்தியா பல விதமான பிரச்சனைகளுக்கும், வன்முறைகளுக்கும், அவற்றின் வேராக இருக்கும் காரணிகளை கண்டு பிடித்து அதற்க்கு தீர்வு காணாமல், கண் மூடித்தனாமாக பாதுகாப்பை அதிகரித்துக்கொண்டே சென்றால், ஒவ்வொரு குடி மகனுக்கும், ஒரு பாதுகாவலர் என்ற நிலைக்குத்தான் வழி வகுக்கும்.

அதே போல, அரசு 40 சதவீகம் கல்வி அறிவு இல்லாதவர் இருக்கும் இந்திய தேசத்தில் படிப்பை வளர்க்க பயன் படுத்தும் தொகை இந்தியாவின் மொத்த உற்ப்பத்தியில் வெறும் 3.5% தான். ஆனால், சர்வதீச நாடுகளை எடுத்துக்கொண்டால், 4.9% ஆகவும், வளரும் நாடுகளில் 3.8% ஆகவும் உள்ளது.
அதே போல, சுகாதாரம் மற்றும் மருத்துவத்திற்கு 0.7% மே ஒதுக்கப்படுகிறது. இது சர்வதேச அளவில் 3.2% ஆகா உள்ளது!

இந்திய அரசு இது போலவே, வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கும், விவசாயிகளுக்கும் (அவர்களின் பயிர் கடன் வட்டியை தள்ளுபடி செய்யவும்)
பல
ஆயிரம் கோடிகளை ஒதுக்குவதாக கூறுகிறது. ஆனால், அந்த தொகை, போய் சேர வேண்டிய கிராம புற ஏழை மக்களுக்கு சென்றடைகிறதா என்றால் இல்லை! (விவசாயிகளை கேட்டால், விவசாய கூட்டுறவு வங்கிகளில் முதலில் கடனே தருவதில்லை என்றும் பாதி நாட்கள் இந்த வங்கிகள் பூட்டியே கிடக்கிண்டறன என்றும் வாங்காத கடனுக்கு வட்டி தள்ளுபடி செய்தால் என்ன அசலை தள்ளுபடி செய்தால் என்ன என்று கேட்கின்றனர்?!). காரணம் தேசமெங்கும் பரவிக்கிடக்கும் ஊழல், லஞ்சம், இன்னும் பிற...இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்றார் மஹாத்மா காந்தியடிகள். ஆம் நாஞ்சில் நாடன் அவர்கள் சொன்னதைப் போல, கிராமங்களில், விவசாயமாக, கைத்தொழிலாக, தொன்மையான சடங்குகளாக, நாட்டுவைத்தியமாக, சிறு தெய்வங்களாக, நாட்டார் கலையாக, விருந்தோம்பலாக, ஆசாபாசங்கள் நிறைந்த அன்பாக, சிற்றோடைகளாக, வால் உயர்த்தித் திரியும் கன்றுகளாக, நாவற் பழ மரங்களாக, குப்பை மேனிச் செடிகளாக, ஒற்றையடிப் பாதைகளாக வாழ்கிறது.

ஆனால் இந்த கிராமங்களின் உயிர் மூச்சாக இருக்கும் விவசாயத்தை நமது ஆட்சியாளர்கள் எவ்வாறு கவணிக்கின்றனர்??"கிராமங்களிலிருந்து சென்னை , கோவை , திருப்பூர் போன்ற நகரங்களுக்கு வேலை தேடி வருவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது. அதில் நூற்றுக்கு தொன்னூறு பேர் விவசாயிகள். காரணம் விவசாயம் லாபகரமானதாக இல்லை. அதற்கான மாற்றுத்திட்டங்கள் ஏதும் முன்மொழியப்படவில்லை". இவ்வாறு நண்பர் மதிபாலா தனது அற்ப்புதமான கட்டுரையில் சொல்லியிருந்தார். உண்மையிலும் உண்மை.. இது தொடர்பில் என்னுடைய சில கருத்தையும் பதிவு செய்ய விரும்பி இதை எழுதுகிறேன்.

எனக்கு தெரிந்த ஒரு விவசாயி ஒரு முறை சொன்னார், "இப்போது நாங்கள் எதிர்நோக்கும் பிரட்ச்சனை எல்லாவற்றிலும் பெரியது வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறைதான், தோட்ட வேலை செய்ய ஆட்கள் வராததால், பலர் விவசாயத்தை கைவிட்டு, தங்கள் விவசாய நிலங்களை சொற்ப விலைக்கு விற்று விட்டு கிடைக்கும் பணத்தை வைத்து நாட்க்களை கடத்த வேண்டிய சூழலில் இருக்கின்றோம்".

மதிபாலா நீங்கள் சொல்வதை போல் பெரு நகரங்களுக்கு இடம் பெயரும் விவசாயிகள் மட்டும் அல்ல. தங்கள் கிராமங்களிலும் விவசாய தொழிலாளர்கள் விவசாயத்தை கைவிட்டுவிட்டு, அரசாங்கம் அறிவித்திருக்கும் கிராம புற வேலை வாய்ப்பு திட்டத்தை நோக்கி சென்றுவிட்டனர். இதன் மூலமாக கிடைக்கும் கூலி விவசாய வேலை செய்வதை விட சற்று அதிமாக இருக்கிறது அதனால் வயக்காடுகளில் கஷ்டப்படுவதை விட இந்த திட்டத்தில் குறைவான வேலை செய்து கிடைக்கும் கூலியை தொழிலாளர்கள் விரும்புகின்றனர்.

மேலும், விவசாயம் செய்பவர்கள், தாங்கள் விளைவித்த பொருட்களை விற்கும் பட்சத்தில் கிடைக்கும் லாபம் மிகவும் சொர்ப்பமாதாக இருக்கிறது என்ற கவலையை தெரிவிக்கின்றனர். உதாரணமாக கரும்புக்கு அரசு நிர்ணயித்துள்ள விலை போதுமானதாக இல்லை, காய் கறிகளை பயிரிடுவோர் தங்களிடம் இருந்து கொள்முதல் செய்யும் இடைத்தரகர்களிடம் மிக மிக குறைந்த தொகையையே பெற முடிகிறது..
ஆனால், இடைத்தரகர்களோ, அதை பெரும் லாபங்களுக்கு கை மாற்றி விடுகின்றனர்.இதை தடுப்பதற்கும் அரசு எந்த உருப்படியான நடவிடிக்கையும் எடுக்கவில்லை. இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது யாதெனில், விவசாய பண்டங்கள், அதை விளைவிக்கும் விவசாயிக்கு பயனளிக்கும் வகையிலும் லாபம் அடையும் வகையிலும் இருந்தால், விவசாயக் கூலியை அதிகரிக்கலாம், தொழிலாளர்கள், ஆர்வத்துடன் வருவார்கள், இந்த தொழிலை செய்ய இளைஞர்கள் முன் வருவார்கள், விவசாய நிலங்களை அழியாமல் காப்பாற்றலாம், நாடு செழிக்கும்.
அதை விடுத்து வேலை வாய்ப்பு தருகிறேன் என்று (நோயின் காரணத்தை அறிந்து மருந்து கொடுக்காமல், அந்த நோய் ஏற்ப்படுத்தும் வலிக்கு, வலி நிவாரணி மூலம் தீர்வுகாண்பதை போல்) விவசாயத்தை நசுக்கினால், ஒரு நாள் அந்த நோய் புரைஓடி உயிரைக்கொல்லும்.

இதற்கெல்லாம் காரணம், விவசாயிகளின் உண்மை பிரட்ச்சனையை உணர்ந்து நீக்காமல், மேம்போக்காக சில திட்டங்கள் மூலமும், கவர்ச்சி திட்டங்கள் மூலமும், ஓட்டு எண்ணிகையை பெருக்கவே ஆட்சியாளர்கள் முனைவது தான்.

   

இந்த பதிவு பலருக்கு சென்றடைய விரும்பினால், தங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள்.