Thursday, July 2, 2009

மதங்கள் எனது பார்வையில்.

மனிதனை நெறிப்படுத்தவென தோன்றியவை மதங்கள். ஆதி மனிதன் தன்னைத் தான் ஒழுங்குபடுத்திக்கொள்ள தோற்றுவிக்கப்பட்டவை மதங்கள். ஆதிமனிதன் சிறு சிறு குழுவாகவும், பல குழு அடங்கிய ஒரு இனமாகவும் வாழ்ந்த போது அந்த இனத்துக்குள் ஒற்றுமை ஓங்கவும், அச்சம் நீங்கவும், தனிமனித வளர்ச்சியடையவும் மதங்கள் தோற்றுவிக்கப்பட்டன.

ஆதி காலகட்டங்களில் மதம் ஒரு வளர்ச்சியடையாத, ஒரு இனத்தின் நலன்களை பாதுகாக்கக் கூடிய அல்லது குறுகிய நோக்கத்தை கொண்ட நம்பிக்கைகளின் கலவையாக இருந்தது. இயற்கையின் பிரம்மாண்டத்தின் மீது இருந்த பயம், பிணி, நோய், மூப்பு, இறப்பு போன்றவை மனிதனை நிலை குலையச் செய்த போது, அவனுக்கு நம்பிக்கை தருவதாகவும் இருந்தது மதம் . அது அந்த இனம் வாழ்ந்த நிலம், இயற்கை சூழல், முதன்மைத் தொழில், உணவு ஆகியவற்றை சார்ந்த வடிவம் கொண்டதாக இருந்தது. இந்த மதம் அல்லது சமயம், ஒரு மனித இனத்தின் கலை, இலக்கியம், நாகரீகம், மருத்துவம், மற்றும் பொழுது போக்கு ஆகியவற்றிக்கு அடிப்படையாக அமைந்தது.

மனிதன் பரிணாம வளர்ச்சி அடைய அடைய, அவன் நிலங்களை கடக்க விரும்பினான். அவன் தன்னோடு தன் மத நம்பிக்கைகளையும் எடுத்துச் சென்றான். காலப்போக்கில் பூகோல ரீதியாக இணைப்பின்றி இருந்த இனங்கள், அல்லது தங்களுக்கென்று ஒரு தனி 'மத' 'சமய' கோட்பாட்டை கொண்ட மக்கள், இடம்பெயர்ந்தனர்.

இவ்வாறு இடம்பெயர்ந்த மக்கள் வேறொரு இனம் வாழ்த்த பகுதிக்கு, அவர்கள் நிலங்களுக்குள் செல்ல, நம்பிக்கைகள் ஒன்றை ஒன்று தழுவியும் எதிர்த்தும் நின்றன. தனது மரபு வழியாகவும், ஆழ்ந்த நம்பிக்கை மூலமாகவும் தனக்குள் பதிந்த மத வழிமுறைகள் பிற இனத்தாலும்; மதத்தாலும் நிராகரிக்கப் பட்டமை இடம்பெயர்ந்த அல்லது பிற இன மக்களை உள்வாங்கிய இனத்தின் உணர்வை குத்த நேரிட்டது. அன்று தொடங்கி இன்று வரை மனிதனின் நலனுக்காக தோற்றுவிக்கப்பட்ட மதம் வெவ்வேறு காலங்களில் இடங்களில் மனிதனுக்கு எதிராக மாறத்தொடங்கியது.

தொன்று தொட்டே இவ்வாறு பிற மத, சமய, இன, மொழி, அடிப்படையில் மனிதனை மனிதன் வேறுபடுத்திப் பார்த்துக்கொண்டான். அதனால், தான் சார்ந்து நிற்கும் மதமே உயர்ந்தது என்று எண்ணிய மனிதன் பிற மதம் சார்ந்த மனிதர்களை எதிர்த்தான். தான் வாழ்ந்த நிலம் மற்றும் இயற்க்கை ஆதாரம் தனக்கும், தன் மதம் சார்ந்த இனத்திற்குமே சொந்தம் என்று நம்பினான், பின் அதுவே, இந்த மொத்த பூமியும் தான் நம்பும் இறைவனுக்கே சொந்தம் என்ற அடிப்படையை தோற்றுவித்தது. இந்த எண்ணம் நிலங்களை அபகரிக்கும் போராக மாறியது. தான் அபகரித்த நிலங்களில் இருந்த சிறிய இனங்களின் மீதும், தங்களுக்கென்று ஒரு மத நம்பிகையுடன் வாழ்ந்த மக்களின் மீதும் ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் மத நம்பிக்கைகளை திணித்தனர்.

கலாச்சார ரீதியிலும், அறிவியல் ரீதியிலும் தாழ்ந்த வளர்ச்சி அடைந்திருந்த மதம் அல்லது இனம் அல்லது இனங்கள் வீழ்ந்தது. போரில் தோற்கடிக்கப்பட்ட மக்கள் அல்லது போர் புரிய தெரியாத மக்கள், தங்களை ஆட்கொண்டவர்களை கண்டு பயந்தனர், வியந்தனர். காலப்போக்கில் பெரிய மதங்கள் சிறிய மதங்களை விழுங்கி பெருத்தன. இவ்வாறு இன்று கணக்கில் வராமல் அழிந்த மதங்கள் பல ஆயிரம் கூட இருக்கலாம். இந்த மத, சமய, இன, மொழி, நிற அடிப்படையிலான மக்களையும், அவர் தம் நிலங்களையும் வளங்களையும் ஆக்கிரமிக்கும் வழக்கம் இன்னும் தொடர்ந்து கொண்டு இருப்பது தான் தீராத போராக, தீவிரவாதமாக இன்று நம்மிடையே கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.

இந்த தீயில் கருகிய மனிதனின் ஆற்றல் அளவிட முடியாதது. ஆம், ஒவ்வொரு இனத்தை சேர்ந்த மனிதனாலும் கண்டறியப்பட்ட; உருவாக்கப்பட்ட எத்தனையோ அறிவியல், இலக்கிய படைப்புகள் இந்த தீயில் கருகின. மனிதனின் அனைத்து தேவையையும் பூர்த்தி செய்ய முடிந்த அறிவியல் வளர்ச்சி இந்த பேதங்களை கலைந்திருக்க வேண்டும்.

ஆனால், மனிதனின் எல்லையற்ற ஆசைகள் அதற்க்கு இன்றும் தடையாக இருக்கிறது. ஆம், நாம் எதை அறிவியலால் விளக்க இயலாதோ, எதை புரிந்து கொள்ள முடிய வில்லையோ, அல்லது எது இல்லையோ அதை தெரிந்து கொள்ள நம் பேராசையால் முனைகிறோம். அது தான் "இறப்பும் அதற்குப் பின்னும்". வாழும் போது பிறரை அழித்து, துன்புறுத்தி, ஆக்கிரமித்து வாழ நினைக்கும் மனிதன், தான் இறந்த பிறகு நிம்மதியாக சொர்கத்தில் வாழ்வோமென நம்புகிறான்; விரும்புகிறான்.

இந்த மாயயை அவனுக்குள் தோற்றுவித்தது எது? பூமியில் அமைதி திரும்ப முடியாமல் இருப்பதற்கு காரணம் என்ன? இறைவன் என்று ஒருவன் இருந்தால் அவனை உணர முடியாமல் போனதற்கு காரணம் என்ன? மதம்.

நாம் அனைவரும் ஒன்றில் இருந்து தான் வந்தோம். அந்த ஒன்று உன்னுடையதும் அல்ல என்னுடையதும் அல்ல. நீ நான் என்ற பேதம் ஒழியும் போது; அல்லது இந்த பேதம் என்னும் தீ அனைவரையும் அழித்து முடிக்கும் போது அது எது என்பது புரிய வரும்.

அனைப்போமா பேதம் என்ற தீயை. மதம் என்ற மாயயை?

   

இந்த பதிவு பலருக்கு சென்றடைய விரும்பினால், தங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள்.